குட்க ஊழல் விவகாரம் தமிழக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பலருடைய பெயர் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது.

இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ பல இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது. இந்த சோதனையில் முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இல்லத்தில் மட்டும் விடிய விடிய சோதனை நடைபெற்று மறுநாள் காலைதான் நிறைவடைந்தது. இந்த சோதனையின் முடிவில் பல ஆவணங்களை சிபிஐ எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து முன்னாள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்த பேட்டியில் பல விஷயங்களை குறிப்பிட்டு பேசிய அவர், தனக்கும் இந்த ஊழலுக்கும் சம்மந்தம் இல்லை என கூறினார். ஆனால் குட்கா ஊழல் நடந்தது உண்மை தான் என ஒப்புக்கொண்டுள்ளார்.

குட்கா விவகாரத்தில் ஊழல் நடந்தது உண்மையே. நடக்கவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், சென்னையில் 300 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அப்படி இருக்க கமிஷனரின் ஆதரவோடு மட்டும் சென்னையில் மிகப்பெரிய அளவில் குட்கா வியாபாரத்தை நடத்த முடியுமா? என ஜார்ஜ் கூறினார்.

செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு ஜார்ஜ் மழுப்பலாகவே பதிலளித்தார். காவல்துறையிலுள்ள உட்பூசல்கள் அவரது பேட்டியின் போது வெளிப்பட்டது. அவர்களுக்குள் பல கோஷ்டிகள் உள்ளது இந்த பேட்டியில் தெளிவாக தெரிந்தது.