தைவானை சேர்ந்த பிரபல மலையேற்ற வீராங்கனை கிஜி உவ், செல்பி மோகத்தில் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்த கிஜி உவ்(36) பிகினி உடையுடன் மலை உச்சியில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவர். இதற்காக அவர் உயரமான மலைகளை தேடி சென்று ஏறி புகைப்படம் எடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 4 வருடங்களில் சுமார் 100 மலை உச்சிகளில் நின்று விதவிதமாக புகைப்படம் எடுத்து அதை பதிவேற்றம் செய்திருந்தார். அவரின் புகைப்படங்களை பலரும் லைக் செய்தனர். இதனால், இதை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தைவானில் உள்ள யூஷன் தேசிய பூங்கா அருகேயுள்ள அமலியில் ஏறும் போது கால் இடறி 20-30 மீட்டர் பள்ளத்தில் கீழே விழுந்தார். கால்களை கூட அசைக்க முடியவில்லை என சேட்டிலைட் போன் மூலம் இதை தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார்.

அவர்களும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்து ஹெலிகாப்டரில் வந்து தேடினர். ஆனால், மோசமான வானிலை காரணமாக தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதன்பின் அவர் சடலமாகவே மீட்கப்பட்டார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் அவரை பின் தொடர்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.