கடந்த ஆண்டு நீட் தேர்வால் தனது மருத்துவர் ஆகும் கனவு தகர்ந்ததால் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையெட்டி தமிழகம் முழுவதம் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளியின் மகள் பிரதீபா நீட் தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளில் பாதிக்கும் குறைவான 45336 மாணவ மாணவிகளே மருத்துவ படிப்புகளுக்கு தகுதி பெற்றனர்.

ஏழை மாணவி பிரதீபா 12-ஆம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய இவர் 155 மதிப்பெண்கள் பெற்று தனியார் கல்லூரியில் சித்தா படிக்க வாய்ப்பு பெற்றார். ஆனால் எம்பிபிஎஸ் படிக்க வேண்டுமென்பதாலும், தனியார் கல்லூரியில் படிக்க பணம் இல்லாததாலும், அரசு கல்லூரியில் இடம் கிடைக்க இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வை எழுதினார் பிரதீபா.

ஆனால் இந்தமுறை நீட் தேர்வு எழுதிய பிரதீபாவுக்கு 39 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்தது. இதனால் மனமுடைந்த பிரதீபா எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவரது உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்துவிட்டனர். மேலும் உயிரிழந்த பிரதீபாவின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பிரதீபாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மூன்று கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் பிரதீபாவின் குடும்பத்தினர்.

இந்த மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் பிரதீபாவின் உடலை வாங்கப்போவதாக கூறியுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தமிழில் எழுதிய பிரதீபா அதில் சில கேள்விக்கு தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக உள்ளதாகவும், அதற்கு தனக்கு 4 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என பிரதீபா எழுதிய கடிதம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.