நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் நேற்று கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கமாக கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துவிட்டு விடுதலை செய்துவிடுவார்கள்.

ஆனால் இந்த முறை பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் இந்த கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தின் போது அவர்கள் எழுப்பிய ஒரு கோஷம் ஆளுநரை கோபப்படுத்தியதாகவும், அதனால் தான் திமுகவினரை சிறையில் அடைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நாமக்கல் அண்ணா சிலை அருகே ஆளுநர் கான்வாய் வந்தபோது, திமுகவினர், திரும்பிப் போ திரும்பிப் போ பன்வாரிலால் திரும்பிப் போ, ஆளுநர் இங்கே நிர்மலா எங்கே? போன்ற கோஷங்களை சத்தமாக கூறினர். மேலும் ஆளுநர் கான்வாயின் பக்கத்தில் சென்ற காரின் பேனட் மீது கல்லும், கறுப்புக் கொடியும் வந்து விழுந்தது.

இந்த சம்பவங்களோடு நிர்மலா என்ற வார்த்தையும் ஆளுநரின் காதில் விழுந்திருக்கிறது. பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஆளுநர் திமுகவினர் எழுப்பிய கோஷங்கள் குறித்த விளக்கத்தை கேட்டுள்ளார். இதனால் எரிச்சலடைந்த ஆளுநர் ஆங்கிலத்தில் சில கடுமையான வார்த்தைகளை பேசினாராம்.

அதன் பின்னர்தான் 197 திமுகவினர் மீது ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், கலகத்தை ஏற்படுத்த முயன்றது என நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர் காவல்துறையினர். கைது செய்யப்பட்ட அனைவரும் 14-நாள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.