ஜம்மு காஷ்மீரில் ஆளும் பிடிபி கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக அறிவித்ததை அடுத்து அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்நிலையில் அங்கு நேற்று இரவு முதல் ஆளுநர் ஆட்சி அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.

கத்துவா சிறுமி பலாத்கார விவகாரத்தில் இரண்டு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்ததில் பாஜகவுக்கும் பிடிபி கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் ரமலான் கால போர் நிறுத்தம் போன்ற விவகாரத்தில் இந்த கருத்து வேறுபாடு இன்னும் அதிகமானது. இந்நிலையில் நேற்று மாலை பிடிபியின் முதல்வரான மெகபூபாவுக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக திரும்ப பெற்றது.

இதனையடுத்து உடனடியாக ஆளுநரை சந்தித்த முதல்வர் மெகபூபா முப்தி தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து 25 உறுப்பினர்கள் கொண்ட தங்கள் கட்சி இனி ஆட்சி அமைக்கவோ, வேறு யாரையும் ஆதரிக்கவோ விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

எந்த கட்சியும் காஷ்மீரில் ஆட்சியமைக்க தயாராக இல்லாததால் ஆளுநர் வோரா சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் ஆலோசித்து, பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சட்டம் 370 பிரிவு 92-ன் கீழ் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு நேற்று இரவு பரிந்துரை செய்தார். குடியரசுத்தலைவரும் ஆளுநர் ஆட்சிக்கு அனுமதி அளித்துவிட்டார்.