நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தான் நடித்து இசையமைத்துவரும் அடங்காதே படத்தில் பார்வை குறைபாடு உள்ள ஜோதி என்ற பெண்ணுக்கு பாடல் பாட வாய்ப்பளித்து அவரது வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளார்.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய ஜி.வி.பிரகாஷ் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது அடங்காதே என்ற படத்தில் நடித்து வரும் ஜி.வி அந்த படத்துக்கு இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது.

நிலவின் நிறமும் வண்ணம் கொள்ள, பிறையின் வளைவும் எண்ணம் சொல்ல… என்று தொடங்கும் ஒரு பாடல் அந்த படத்தில் உள்ளது. இந்த பாடலை ஜோதி என்ற பார்வையில்லாத மாற்றுத்திறனாளி ஒருவர் பாடியிருப்பதாக ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அனைவரும் ஜோதியின் திறமைக்கு ஆதரவு கொடுங்கள். இது அவருடைய முதல் பாடல். முதலில் அவரை சமூக வலைதளங்களின் வாயிலாகவே நான் தெரிந்துகொண்டேன். பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும் பல தடைகளைத் தகர்த்தெறிந்து இந்த இடத்தை அடைந்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.