நடிப்பு, இசை என ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், மறுபக்கம் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் வீட்டுக்கு ஆறுதல் கூறச்சென்ற முதல் நட்சத்திரம் இவர்தான். இதுமட்டுமில்லாமல், சத்தமேயில்லாமல் சில மக்கள் சேவைகளிலும் ஜி.வி.பிரகாஷ் செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதாவது, அரசு பள்ளிகளுக்கு இலவசமாக கழிப்பறை கட்டிக் கொடுக்கும் பணிகளை ஜி.வி.பிரகாஷ் சத்தமே இல்லாமல் செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விழுப்புரம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு இவர் இலவச கழிப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளார். அதை திறந்துவைக்க கிராம மக்கள் அனைவரும் இவருக்கு அழைப்பு விடுக்க, நேரில் சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், அங்குள்ளவர்கள் அனைவரும் இவருக்கு விருந்து கொடுக்க ஆசைப்பட, அவர்களின் இல்லத்துக்கு சென்று தரையில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வந்துள்ளார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து அருகில் இருந்த மற்றொரு அரசு பள்ளிக்கும் சென்று அங்குள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.