இயக்குனர் பாலா படத்தில் நடிப்பது குறித்து சில தகவல்களை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பகிரிந்து கொண்டுள்ளார்.

தாரைதப்பட்டை படத்திற்கு பின் ஒரு வருட காலமாக எந்த படத்தையும் பாலா இயக்கவில்லை. தற்போது நடிகை ஜோதிகா மற்றும் ஜு.வி. பிரகாஷை வைத்து நாச்சியார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் ஜு.வி.பிரகாஷ் ஒரு சைக்கோ கொலையாளி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

பாலா படம் என்றாலே, முக்கிய கதாபாத்திரம் ஒன்று மனநிலை பாதிக்கப்பட்டது போல்தான் இருக்கும். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு அந்த வேடத்தை கொடுத்திருக்கிறார் பாலா. தனது ஹீரோக்களை அப்படத்தின் கதாபாத்திரமாகவே மாற்றும் திறமை கொண்ட பாலாவிடம் ஜி.வி. பிரகாஷ் வசமாக சிக்கி சின்னா பின்னமாகப் போவது உறுதி என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஜி.வி.பிரகாஷ் “ நான் ஒரே மாதிரியான காமெடி படங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். எனவே, இனிமேல் சீரியஸான படங்களிலும் நடிக்க முடிவெடுத்துள்ளேன். இதனால் இயக்குனர்கள் பாலா, வெற்றிமாறன், சசி ஆகியோரின் படங்கள் என்னை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்.

அவர்களின் கதைக்கு நான் பொருத்தமானவன் என அவர்கள் நினைத்திருக்கலாம். நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்கவில்லை. என் படத்தில் நீ நடிக்கிறாய் என பாலா சொன்னார். நான் சரி என்றேன். அவர் யாரிடமும் கதை சொல்லமாட்டார் என்கிறார்கள். ஆனால், அவர் என்னிடம் நாச்சியார் படத்தின் முழு கதையையும் கூறினார். இந்த படத்தில் நான் ஜோதிகாவின் தம்பியாக நடிக்கவில்லை. இந்த படம் ஒரு திரில்லர் கதை. அதை தவிர என் கதாபாத்திரம் பற்றி நான் வேறு எதும் கூறமுடியாது” எனக் கூறினார்.