கமல் இந்து தீவிரவாதம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிவிட்டரில் ராஜா கமலைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் நேற்று  பள்ளிப்படையில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். கமலின் இந்த பேச்சு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஜக ஆதரவாளர்களும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களும் கமலுக்குக் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு படி மேலேப் போய் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 இதையடுத்து கமலின் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும் கமல் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ள பட்டு வருகின்றன. கமலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா டிவிட்டரில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் ‘திருநெல்வேலி மேலப்பாளையம் முஸ்லிம்கள் 1947 ஆகஸ்டு 14 அன்று பாக்கிஸ்தான் கொடியேற்றினர். சுதந்திர இந்தியாவின் முதல் தேசவிரோத செயல் அது என்று சொல்ல கமலுக்கு தைரியம் வருமா? அந்த முஸ்லிம்களும் அவர்கள் சந்ததியும் பாக்கிஸ்தானுக்கு போகவில்லை இங்குதான் உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் ஹெச் ராஜா குறிப்பிட்டுள்ள அந்த நாள் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய நாள் என்பது குறிப்பிடத்தக்கது