இந்து தீவிரவாதம் குறித்துப் பேசிய மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல் ஆண்ட்டி மனிதகுலம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன்  ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி  கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று  கூறினார்.

கமலின் இந்த பேச்சுக்கு எதிராக பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யோய சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் “தமிழ்நாட்டில் நடந்த பிரச்சினைக்கு அங்கே வழக்கு பதியாமல் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கமலின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ‘ கமல் ஆண்ட்டி இந்தியன் மட்டுமல்ல ஆண்ட்டி மனித குலம். அவர் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்காவிட்டால் வைரமுத்துவுக்கு நடந்தது போல அவருக்கு எதிராகவும் போராட்டம் நடக்கும்.’ என அறிவித்துள்ளார்.