தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது முதன்மையானதாக விளங்குவது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிலரது வாழ்க்கையில் முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. ஓவியா, பரணி ஆகியோர் மக்களின் நன்மதிப்பை பெற்று தற்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள். ஆனால், ஓருசிலர் மக்களின் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

காயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி, ஜுலி ஆகியோர் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்கள். அவர்களின் குணாதிசயம், நடத்தைகள்   மக்கள் மத்தியில் அவர்கள்மீது வெறுப்பை வரவழைத்துள்ளது. இதனாலேயே அவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டார்கள். இவர்கள் மீது மக்கள் காட்டிய ஒட்டுமொத்த வெறுப்பும் வாக்குகளாக பதிவாகி வெளியேற்றப்பட்டார்கள்.

ஆனால், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காக அந்த டிவி நிர்வாகம் மக்களால் வெளியேற்றப்பட்டவர்களை அவர்களின் சுயலாபத்திற்காக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியுள்ளது. யாரெல்லாம் அந்த வீட்டிற்குள் இருக்க தகுதியில்லாதவர்கள் என்று மக்கள் நினைத்து ஓட்டுப் போட்டார்களோ, தற்போது அவர்களின் ஓட்டுக்கு மதிப்பளிக்காமல் மக்களின் வெறுப்புக்கு ஆளானவர்களை மீண்டும் உள்ளே அனுப்பி, தனது வியாபாரத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது அந்த டிவி நிர்வாகம்.

காயத்ரி ரகுராம், சக்தி, ஆர்த்தி, ஜுலி ஆகியோரில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விருப்பப்பட்டவர்களில் ஜுலியும், ஆர்த்தியும் தான் அதிகம் ஆர்வம் காட்டினர். ஆனால், சக்தியும், காயத்ரி ரகுராமும் தங்களுக்கு உள்ளே செல்ல விருப்பமில்லை என்று தெரிவித்தனர். ஜுலியும் ஆர்த்தியும் விருப்பம் தெரிவித்த மறுநாளே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். போன நாள் முதல் இன்று வரை இரண்டு பேரும் தங்களுடைய குணாதிசயத்தை இதுவரை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை.

மாறாக, தாங்கள் வெளியே சென்று அனைத்தையும் பார்த்துவிட்டோம் என்ற கர்வத்துடனேயே தெரிகிறார்கள். ஆர்த்திக்கு ஒருபடி மேலேபோய் ஜுலி அந்த போட்டியாளர்களிலேயே தான்தான் சீனியர் போல் அனைவரிடமும் நடந்துகொள்வது பார்வையாளர்களுக்கு எரிச்சலையே தருகிறது. முதலில் ஒரு வாரம் தான் ஜுலியும், ஆர்த்தியும் உள்ளே இருப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது கமல் மீண்டும் ஒரு வாரம் அவர்களை உள்ளே இருக்க அனுமதி கொடுத்திருக்கிறார். இது பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல, உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன்ஊடே தற்போது டிரிக்கர் சக்தியும் நேற்று முதல் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார். அவரும் வந்தவுடன் தன்னுடைய டிரிக்கர் வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆக, பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்தபடி  வீட்டிற்குள் மீண்டும் சண்டை, சச்சரவுகள் கூடி நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிறப்போகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிற, ஓட்டுப் போட்ட ரசிகர்களைத்தான் முட்டாளாக்கியிருக்கிறது இந்த நிர்வாகம். ரசிகர்கள் அனைவரும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை  வெறுக்க ஆரம்பித்துள்ளார்கள்.

தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள் உள்ளே வர எந்த முயற்சியும் எடுக்காத பிக்பாஸ், தனது சுயலாபத்துக்காக மக்களின் வெறுப்பை சம்பாதித்த போட்டியாளர்களை உள்ளே நுழைத்து வேடிக்கை பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடிய விரைவில் அவர்களையெல்லாம் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் வெளியே அனுப்பி மக்களிடம் நல்ல பெயரை எடுப்பார்கள் என நம்புவோமாக….