தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும் என்று தமிழக மக்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு என மழை பெய்யத்தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக கேரளாவை கனமழை மிரட்டி வருகிறது. ஒட்டுமொத்த கேரளாவும் நிலைகுலைந்துள்ளது இந்த மழையால். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்து வருகிறது. இதனையொட்டி தற்போது தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் விடாமல் மழை பெய்து வருவதால் அதன் தாக்கம் தமிழகத்தில் எதிரொலிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.