ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தால் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் பற்றி எரிகிறது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். தூத்துக்குடி கலவர பூமியாக மாறியதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மிக தீவிர போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தீக்கிரையாக்கினர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர். கல்வீச்சின் மூலம் ஆட்சியர் அலுவலகம் சூறையாடப்பட்டது. அங்குள்ள ஊழியர்கள் தப்பியோடிவிட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பகுதி தீ வைக்கப்பட்டுள்ளது. தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்தியும் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. விரட்டியடிக்கப்படும் போராட்டக்காரர்கள் திரும்பி வந்து தாக்குவதால் போலீசார் நிலைமையை கட்டுப்படுத்த முடியமல் திணறுகின்றனர்.

போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி தற்போது ஒட்டுமொத்த தூத்துக்குடி நகரமும் பொதுமக்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நீடிக்கிறது. தூத்துக்குடி கலவர பூமியாக மாறியுள்ளது. அரசுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் உருவாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.