நாடு 69வது குடியரசு தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், இந்தியாவில் நடந்த முதல் குடியரசு தின விழா பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜனவரி 26ம் தேதி ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் அகில இந்திய மாநாட்டில் பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்துதான் 1930ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அமைதியான முறையில் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என காந்திஜி வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், 1947 ஆகஸ்டு 15ம் தேதி பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் கொடுத்ததால், அந்த நாள் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டது. அதோடு, காந்தி கூறிய ஜனவரி 26ம் நாள்தான் சுதந்திரம் அடைந்த பின், 1949ம் ஆண்டு நேரு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல் குடியரசு தின விழா எப்படி நடந்தது என்பது பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத்தும், பிரதமராக நேருவும், ஆளுனராக சி.ராஜகோபாலாச்சாரியும் இருந்தனர். இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட பின், குடியரசு தின அணிவகுப்பு நடந்தது. துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் விண்ணில் சீறி பாய்ந்தன.

பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வருவதை அந்த குடியரசு தின நிகழ்வுகள் பறைசாற்றின. இந்திய நாடு இறையாண்மை உள்ள, முழுவதும் சுதந்திரம் பெற்ற நாடாக உருவானதை மற்ற நாடுகளுக்கு அந்த விழா பறைசாற்றியது. பிரிட்டிஷ அரசின் ஆறாம் ஜார்ஜ் அரசர் வாழ்த்து செய்தியும் அனுப்பியிருந்தார்.

அதில், இந்தியா காமன்வெல்த் கூட்டமைப்பில் தொடரும் எனவும் குறிப்பிட்டிருந்தார். விமான விபத்தில் காணாமல் போன நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அந்த விழாவில் கலந்து கொள்வார் எனவும் வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை.

தற்போது நடப்பது போல் முதல் குடியரசு தின அணிவகுப்பு விழா அவ்வளவு ஆடம்பரமாகவெல்லாம் நடைபெறவில்லை. ஆனால், அந்த விழாவை கொண்டாட வேண்டிய தேவை இருந்தது. இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை அனைத்தும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன. ஆனால், தற்போது போல் இல்லாமல், அந்த மைதானத்திற்குள் மட்டுமே அந்த அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய படைகளின் முதல் தலைவராக ஃபீல்ட் மார்ஷல் கரியாப்பா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.