69வது குடியரசு தினத்தை கொண்டாட நாடு தயாராகி வரும் வேளையில், குடியரசு தினம் கொண்டாடப்படுவதன் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜனவரி 26ம் தேதி ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் அகில இந்திய மாநாட்டில் பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது நாடெங்கும் வறுமை வாட்டிக் கொண்டிருந்தது. பொருளாதாராமும் மந்த நிலையில் இருந்தது. இருந்தாலும், சுதந்திர எழுச்சியும் மக்கள் மனதில் கனன்று கொண்டிருந்தது. அதன் விளைவாக பல போராட்டங்கள் நடைபெற்றன. எனவே, மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினால் அது மேலும் வன்முறைக்கு வழிவகுக்கும் எனக்கருதிய காந்திஜி, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்புவது குறித்து யோசித்தார்.

அதன் விளைவாக நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி ஒரு உறுதிமொழியை உண்டாக்கினர்.

பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அப்படி காந்தி கூறிய ஜனவரி 26ம் நாள்தான் சுதந்திரம் அடைந்த பின், 1949ம் ஆண்டு நேரு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.