சென்னையில் முடி திருத்தும் நிலையம் ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் அவரது நடை, உடை, பாவனைகளால் கேலி செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அவினாஷ் படேல் எனும் 20 வயது இளைஞர் சென்னையில் முடிதிருத்தும் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். இவர் ஓரினச்சேர்க்கை மீது ஈர்ப்புக் கொண்டவர் என்பதால் இவரின் நடை, உடை மற்றும் பாவனைகளை அவரது நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோர்  ஆகியோர் அவரைக் கேலி செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவினாஷ் கடந்த ஜூலை 2 ஆம் தேதி தனது பேஸ்புக்கில் ‘நான் ஓரினச்சேர்க்கையாளனாக இயற்கையால் உருவாக்கப்பட்டவன். என்னைக் கிண்டல் செய்த அனைவருக்கும் நன்றி. இந்தியா போன்ற நாட்டில் என்னால் ஓரினச்சேர்க்கையாளனாக வாழ்வது இயலாதக் காரியம்’ என எழுதிவிட்டு அன்றிரவே நீலாங்கரை கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது பேஸ்புக் பதிவை அடிப்படையாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.