ஆந்திராவில் ஜாமீனில் வெளியே வந்து மனைவியைக் கொலை செய்த கணவன் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த தம்பதிகள் பிரபுகுமார் மற்றும் கிரண்டி. இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். ஆனால் 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இருவரும் மனவருத்தத்தில் இருந்துள்ளனர்.

இதையடுத்து குழந்தைக்காக இருவரும் அடிக்கடி மருத்துவர்களிடம் சென்று சோதனைகள் செய்து வந்துள்ளனர். இது சம்மந்தமாக இருவருக்கும் இடையில் இருந்த விரிசல் பெரியதாகி அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் பிரபுகுமார் கிரண்டியை அடித்துத் துன்புறித்தியுள்ளார். பிரபுவின் கொடுமை தாங்காமல் கிரண்டி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனாலும் பிரபுவின் கொடுமைக் குறையாததால், போலிஸில் புகாரளிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த அவர் நேற்று முன் தினம் தனது மனைவியின் வீட்டுக்கு சென்று அவரை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன் பின் வெட்டப்பட்ட அவரது தலையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அதைப்பார்த்த மக்கள் பீதியடைந்து போலிஸுக்குப் புகாரளித்துள்ளனர். பிரபுகுமார் அங்கிருந்த கால்வாய் ஒன்றில் தலையை வீசிவிட்டு போலிஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.