நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று சென்னையில் மகளிர் தின சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சியில் மரணம் அடைந்த உஷாவிற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அறிவித்த கமல், பேசியதாவது:

அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. அரசியலை கண்காணிக்க வேண்டும். பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை. பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது.

மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு நான் வந்துள்ளேன். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்க தயங்க வேண்டும். மய்யம் என்பது நடுவில் இருந்து பார்த்து நேர்மையாக எடுக்கும் முடிவு. எந்த ஒன்றையும் நடுவில் இருந்து பார்த்தால் மட்டுமே அனைத்தும் விளங்கும். மய்யம் என்பது தராசின் நடுவில் உள்ள முள் போன்றது.