சட்டமன்றத்தில் கிராமியக் கலைஞர்கள் குறித்து பேசிய திமுகவின் துரைமுருகன், தான் சினிமா துறைக்கு சென்றிருந்தால் ஜெயலலிதாவோடு நடித்திருப்பேன் என்று கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரான துரைமுருகன் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. இவர் நகைச்சுவையாக சட்டசபையில் பேசுவதில் வல்லவர். இந்நிலையில் அவர் நேற்று கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்துப் பேசியபோது தன் பேச்சினிடையே சில கிராமியப் பாடல்களையும் பாடிக் காட்டினார்.

துரைமுருகன் பாடலைக் கேட்ட சபாநாயகர் தனபால், நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்களே, சிறு வயதில் நாடகங்களில் நடித்துள்ளீர்களா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், சிறு வயதில் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல இந்த உலகம் ஒரு நாடக மேடை. இங்கு அனைவரும் நடித்துக் கொண்டிருக்கிறோம். அவையில் சபாநாயகராகிய நீங்கள் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நடித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

அப்போது துரைமுருகனை பாராட்டிப் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், நவரசங்கள் வெளிப்படும் விதமாக துரைமுருகன் பேசுவதாக கடந்த 2001-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவையில் புகழ்ந்து பேசியுள்ளதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து பேசிய துரைமுருகன், நான் சினிமாத் துறைக்கு சென்றிருந்தால் சிவாஜி கணேசன் போன்று புகழ்பெற்ற நடிகராகி இருப்பேன். ஜெயலலிதாவோடு நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்திருக்கும் என்று அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.