கேரள நடிகை பாவனாவிற்கும், அவரது காதலர் நவீனுக்கும் இடையே நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சமீபத்தில் நடிகை பாவனாவை, சிலர் காரில் நடத்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். அது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் கேரள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பின் அதிலிருந்த மீண்ட பாவனா தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், அவருக்கும், அவரின் காதலர் கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீனுக்கும் நேற்று திருச்சூரில் உள்ள பாவனாவின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் பாவனாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் தோழிகள் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாவனா “நான் கன்னடத்தில்  ‘ரோமியோ’ என்ற படத்தில் நடித்த போது, நவீனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. சென்ற வருடமே திருமனம் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால், எதிர்பாராதவிதமாக எனது தந்தை மரணம் அடைந்ததால் எங்கள் திருமணம் தள்ளிப் போனது.

எனவே, இன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மனரீதியாக நான் தைரியமாகவே இருக்கிறேன். இந்த வருட இறுதியில் எங்களின் திருமணம் நடைபெறும். அதன் பின்னும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்” என பாவனா கூறினார்.