சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என்றும், அவர் நிச்சயம் வரும் 31ஆம் தேதி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் ரஜினியின் ரசிகர்கள் பலர் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் தற்போதைய அரசியல் அவருக்கு சரியாக வராது என்றும் கூறி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இதுகுறித்து கூறியபோது: அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் நிச்சயம் அறிவிக்க மாட்டார். ரசிகர்களுடனான சந்திப்பை உற்சாகப்படுத்தவே இதுபோன்று அவர் பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போதுள்ள சூழலுக்கும், ரஜினியின் குணத்துக்கும் அவர் அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது. அவரால் அரசியலில் வெற்றி பெறவும் முடியாது. 1996-ல் மிக அருமையான வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னரும் சில வாய்ப்புகள் தேடி வந்தன. இதையெல்லாம் பயன்படுத்த தவறிவிட்டார். தமிழருவி மணியனை அடிக்கடி சந்திப்பதாலும் அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதாலும் அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்ற மாயை மட்டுமே உருவாகியுள்ளது.

திருச்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் கூறியபோது, ‘என்னைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. மீறி வந்தால், கடந்த 40 ஆண்டு காலமாக திரையுலகில் சம்பாதித்து வைத்துள்ள நற்பெயரை, அரசியல் என்னும் சாக்கடை மூலம் கெடுத்துவிட நேரிடலாம். ரஜினியை நாங்கள் தலைவராக காட்டிலும், கடவுள் மாதிரியே பார்க்கிறோம். அவர் இப்படியே இருந்துவிட வேண்டும், அரசியலுக்கு வர வேண்டாம் என்பது என் விருப்பம்.