13 வருடங்களுக்கு பிறகு கொள்கையை மாற்றிய இளையராஜா…

இயக்குனர் சீனுராமசாமி அடுத்து இயக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தை அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதி நடித்து வெளியான தர்மதுரை பட வெற்றிக்கு பின் சீனு ராமசாமி தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். மேலும், யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரின் தந்தை இளையராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசை அமைக்க உள்ளனர் என்பதுதான் சிறப்பு செய்தி.

பொதுவாக இளையராஜா இதுவரை எம்.எஸ்.விஸ்வநாதனை தவிர வேறு யாருடன் இணைந்து இசையமைக்கவில்லை. மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ் செல்வன் ஆகிய படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்தனர். கடைசியாக 2004ம் ஆண்டு இயக்குனர் சுமதிராம் இயக்கிய விஸ்வ துளசி என்கிற படத்திற்காக அவர்கள் இணைந்து இசையமைத்தனர். அதன்பின் யாருடனும் இணைந்து இளையராஜா இசையமைக்கவில்லை.

தற்போது தனது மகன் யுவன் சங்கர் ராஜாவோடு இணைந்து இளையராஜா இசையமைக்கிறார். எனவே, இப்படத்தின் பாடல்கள் இசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.