நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் அலுவலகத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் ரூ.51 லட்சம் விஷால் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்க விஷால் வரும் 27ஆம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ‘எனது அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுவொரு வழக்கமான சோதனை தான். இதன் பின்னணியில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இருக்கும் என்று நான் கருதவில்லை. அப்படியே இருந்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன். நான் ஒழுங்காக வரி கட்டி வருவதால் எந்த சோதனைக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறினார்

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமீபத்தில் விஷால் கூறியதை அடுத்தே இந்த வருமான வரிசோதனை என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.