இந்தியா இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. இதனால் முதல் நாளே இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிவிட்டது இந்தியா.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய பந்துவீச்சாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் ஆட்டத்தை வைத்திருந்தனர். முதல் ரன் எடுத்தபோதே முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து. தொடர்ந்து வரிசையாக இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து விக்கெட்டை வீழ்த்த 86 ரன் எடுத்திருந்தபோது அந்த அணி 6 விக்கெட்டை இழந்து மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது.

அதன் பின்னர் வந்த சாம் கர்ரன் மற்றும் மொயீன் அலி கூட்டணி நிதான ஆட்டத்தை கடைபிடித்து இங்கிலாந்து அணியை கொஞ்சம் சரிவிலிருந்து மீட்டது. 167 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த கூட்டணி முடிவுக்கு வர இங்கிலாந்து அணியின் ஆட்டம் 246 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டையும் இழந்து முடிவுக்கு வந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 78 ரன்களும், மொயீன் அலி 40 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்த பாட்னர்ஷிப் அமையவில்லையென்றால் இங்கிலாந்து அணி 150 ரன்னுக்குள் முடங்கியிருக்கும்.

இந்தியா தரப்பில் பும்ரா மூன்று விக்கெட்டையும், இஷாந்த் ஷர்மா, சமி, அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் விக்கெட் எதுவும் இழப்பில்லாமல் 19 ரன்கள் சேர்த்துள்ளது. தவான் 3 ரன்னுடனும், கேஎல் ராகுல் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.