இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, கட்டாயம் வென்றாக வேண்டிய மூன்றாவது போட்டியில் வெற்றிவாகை சூடியுள்ளது.

நாட்டிங்ஹாம் ட்ரெண்ட் ப்ரிட்ஜில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 97 ரன்களும், ரஹானே 81 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பிராட், வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் பட்லர் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 352 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் கோலி 103 ரன்களையும் புஜாரா 72 ரன்களையும் குவித்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சின் முன்னிலையுடன் இந்திய அணி இங்கிலாந்துக்கு 521 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் பட்லர் 106 ரன்களையும், ஸ்டோக்ஸ் 62 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. ஆட்ட நாயகன் விருது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்ட்டது.