பட்ஜெட் பிரச்சனை காரணமாக இந்தியன் 2 படம் கைவிடப்படலாம் என தமிழ் சினிமா வட்டாரத்தில் செய்திகள் கிசுகிசுக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 பூஜை போடப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், இந்தியன் தாத்தா மேக்கப்பில் ஷங்கருக்கு திருப்தி இல்லை. எனவே, சில நாட்கள் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின், அமெரிக்கா சென்ற ஷங்கர், அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு, கமலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின், கமல்ஹாசனின் மேக்-அப்பில் ஷங்கர் திருப்தி அடைந்ததால், மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது எனவும் படப்பிடிப்பை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடத்த படக்குழு திட்டமிட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

அதேசமயம், 2.0 படத்திற்கு ரூ.540 கோடி செலவு செய்து நஷ்டத்தை சந்தித்ததால், இந்தியன் 2 -விற்கும் ஷங்கர் அதிக பட்ஜெட்டை இழுத்து விட்டு விடுவார் என லைக்கா தயாரிப்பு நிறுவனம் பயப்படுகிறதாம். எனவே, இதுதான் பட்ஜெட். இதற்குள் படத்தை முடிக்க வேண்டும் என ஷங்கரிடம் கறார் காட்டுவதாக தெரிகிறது. கூறிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நபர் ஷங்கர் இல்லை. எனவே, இது ஷங்கருக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படியே போனால் இந்தியன் 2 கைவிடப்படலாம் அல்லது வேறு தயாரிப்பு நிறுவனத்தின் கைக்கு மாற வாய்ப்பிருக்கிறது என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.