இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71-ஐ தொட்டு வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் சரிந்து 71 ரூபாயாக வீழ்ச்சி அடைந்து வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது.

அந்நிய செலாவணி சந்தையில் இன்று காலை வா்த்தகத்தின் போது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிவை கண்டது. இதனைத் தொடா்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு 71-ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்தி சில தினங்களாக தொடா்ந்து சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71-ஆக வீழ்ச்சியடைவது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

துருக்கி நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருள்கள் மீதான வரியை அமெரிக்கா அதிகப்படுத்தியது. இதனால் துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. லிராவின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளதால் உலக அளவில் வளா்ந்து வரும் பொருளாதார நாடுகளிலும் பாதிப்பு அடைந்துள்ளது.

சா்வதேச கரண்சிகளை விற்பதில் ரிசா்வ் வங்கியின் தலையீடு, பாதுகாப்பான முதலீட்டிற்கு ஏற்பட்ட போட்டித் தன்மை போன்ற காரணங்களாலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவை ஏற்படுத்தி உள்ளது.