Critic choice film awards- கிரிட்டிக்ஸ் சாய்ஸ் ஃபிலிம் நிறுவனம் மற்றும் மோஷன் கண்டெண்ட் குரூப் ஆகியவை இணைந்து தமிழ் உட்பட இந்தியாவில் தயாரிக்கப்படும் 8 மொழி திரைப்படங்களுக்கும் விருதுகளை அளிக்கவுள்ளன.

இந்த விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டிருக்கும் திரைப்படங்களின் பெயரை பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் நடிகர் ஜோயா அக்தர் ஆகியோர் சமீபத்தில் அறிவித்தனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2015ம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்ட தகவல் படி இந்தியாவில் மட்டும் வருடந்தோறும் சுமார் 2 ஆயிரம் திரைப்படங்கள் தயாராகின்றன. இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவை இங்கு தயாரிக்கப்படும் திரைப்படங்களில் பிரதிபலிக்கின்றன.

இந்த விருதுக்கு தமிழில் பரியேறும் பெருமாள், வட சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மற்ற மொழிகளிலும் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வருகிற ஏப்ரல் 21ம் தேதி இந்த விருது வழங்கும் விழா மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ரங்க் மந்திரில் நடைபெறவுள்ளது. நடிகை நேஹா துபியா இந்த விருதுகளை வழங்குகிறார். அதேபோல், இந்திய சினிமாவின் ஒரு முக்கிய பிரலமான சினிமா விமர்சகர் இந்த விருதுகளை அறிவிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த விருதை வழங்கும் மோஷன் கண்டெண்ட் க்ரூப் நிறுவனம் உலகமெங்கும் தன்னுடைய கிளைகளை கொண்டுள்ளது. மேலும், உலகத்தின் முன்னனி திறமைசாலிகளுடன் இணைந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படுகிறது. உலகமெங்கும் 26 நாடுகளிலிருந்து இந்நிறுவனம் செயல்பட்டு, விருது வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.