ஐஎன்எக்ஸ் மீடியாவின் முன்னாள் தலைவரும், பிரபல தனியார் தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியுமான இந்திராணி முகர்ஜி தன் மகளை கொலை செய்த வழக்கில் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 46 வயதான அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையை மட்டுமல்லாமல் இந்தியாவையே பரபரப்பாக்கியது ஷீனா போரா கொலை வழக்கு. இந்திராணி தான் தனது மகள் ஷீனா போராவை கொலை செய்தார் என கடந்த 2015-ஆம் ஆண்டே கைது செய்யப்பட்டார். இந்திராணியின் மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா காதலித்ததால் இந்த கொலை நடந்ததாகவும். இந்த கொலைக்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் இந்திராணி அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஆகிய நான்கு பேரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 46 வயதான இந்திராணி மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்ப்பட்டது. இதனால் அவர் உடனடியாக மும்பை ஜெஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திராணிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.