ராணுவ மேஜர் என்றய பொறுப்பில் இருக்கும் விஷால் மன நல டாக்டர் சமந்தாவின் அறிவுரையின்படி கிராமத்தில் வசிக்கும் தன் அப்பா டெல்லி கணேஷ், தங்கை பார்க்க செல்கிறார். சென்ற இடத்தில் தங்கை ஒரு வாலிபரை காதலித்தார் என்பதும், அவருடைய திருமணம் வரதட்சனையால் நின்றுவிட்டது என்பதும் தெரியவருகிறது. இதுவரை கடன் வாங்கியே பழக்கம் இல்லாத விஷால், முதல்முறையாக பெர்சனல் லோன் கேட்டு வங்கி வங்கியாக ஏறி இறங்குகிறார். ஆனால் வங்கிகள் அவருக்கு செக்யூரிட்டி இல்லாமல் கடன் கொடுக்க மறுக்கின்றன. இந்த நிலையில் ஒரு ஏஜண்டை நம்பி குறுக்கு வழியில் வங்கியில் ஏமாற்றி கடன் பெறுகிறார். ஆனால் அந்த பணம் திடீரென வங்கியின் கணக்கில் இருந்து காணாமல் போகிறது. இதனால் அதிர்ச்சியடையும் விஷால், எப்படி காணாமல் போனது என்று விசாரிக்க ஆரம்பிக்க, தன்னைப்போல் பலருடைய வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது தெரியுஅ வருகிறது. தன்னுடைய ராணுவ வசதிகளின் மூலம் இந்த வேலையை செய்வது அர்ஜுன் தான் என்பதை கண்டுபிடிக்கின்றார். அவரை பிடித்தாரா? விஷாலுக்கு தன்னுடைய பணம் கிடைத்ததா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஷால், அவருக்கே உரிய பாணியில் மேஜர் கேரக்டரில் சூப்பராக நடித்திருக்கிறார். இராணுவ அதிகாரியாக கம்பீரமாகவும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் அண்ணனாகவும், கடன் வாங்கும் அப்பாவை கண்டிக்கும் மகனாகவும் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய விஷால், சமந்தாவிடம் ரொமான்ஸ் செய்யும் அழகே தனி. இடைவேளைக்கு பின்னர் பணம் பறிபோன பிறகு, அதற்கு காரணமானவரை கண்டுபிடிக்க அசுர வேகத்தில் முயற்சி செய்வது விஷால் நடிப்பில் ஒரு புதிய பரிணாமம்

நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு அருமை. இருப்பினும் அவர் இந்த படத்தின் மெயின் கதையோடு ஒட்டாததால் மனதில் நிற்கவில்லை. வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுனின் நடிப்பு மிரள வைக்கும் அளவுக்கு உள்ளது. டிஜிட்டல் உலகின் டான் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி, தனது அபார நடிப்பின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். விஷாலின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், வெகுளித்தனமாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதில் நிற்கும் கதாபாத்திரம்.

வித்தியாசமான திரைக்கதையை கையில் எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதைக்களத்தை உருவாக்கி, தெளிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் விளைவுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். நம்மளுடைய தகவல்களை இன்டர்நெட்டில் பதிவு செய்து வைத்தால், என்னென்ன விளைவுகள் வரும் என்பதை காண்பித்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் சரியாக வேலை வாங்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘இரும்புத்திரை’ ஒரு அசைக்க முடியாத கோட்டையாக உள்ளது. டிஜிட்டல் உலகின் மர்மங்களை தெரிந்து கொள்ள இந்த படத்தை ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்

ரேட்டிங்: 4/5