முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. இதற்காக தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டுள்ளனர்.

ஆனால் இந்த நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் பதவியேற்பு நிகழ்ச்சியை ராஜ்பவனில் நடத்தியுள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் நீதிபதிகளுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், பதவியேற்பு விழா குறித்து வழக்கறிஞர் ஷாஜி செல்லான் என்பவர் பல்வேறு கேள்விகளைத் தனது முகநூல் பக்கத்தில் முன்வைத்துள்ளார். அதில், தமிழக அரசு தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு ஏழு நாட்கள் துக்கம் அனுசரித்து வருகிற இவ்வேளையில், தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

மேலும் நிகழ்ச்சியில் மரபுக்கு மாறாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்னிருக்கைகள் மறுக்கப்பட்டு, அவை போலீஸாருக்கும் மற்றவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.