திமுக தலைவர் கருணாநிதி இறந்த பின்னர் முதல் செயற்குழு கூட்டம் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஜெ.அன்பழகன் மு.க.அழகிரிக்கு எதிராக மறைமுகமாக பேசினார்.

முன்னதாக கருணாநிதி சமாதியில் நேற்று அஞ்சலி செலுத்திய அவரது மகன் மு.க.அழகிரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவின் உண்மையான விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கமே இருக்கின்றனர், திமுகவில் உள்ள பலரும் தன்னுடன் தொடர்பில் உள்ளதாக கூறினார் அழகிரி. இதற்கு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடனடியாக பதிலடி கொடுத்தார்.

திமுகவில் யாரும் அழகிரியுடன் தொடர்பில் இல்லை, அனைவரும் கட்டுக்கோபாக இருக்கிறோம். அழகிரி திமுகவில் இல்லாததால் அவரது கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை. அவர் கட்சியில் இல்லாதது திமுக தலைவர் கருணாநிதி எடுத்த முடிவாகும், இப்போது இருப்பவர்கள் எடுத்ததல்ல என்றார் ஜெ.அன்பழகன்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் அழகிரி குறித்து பெயர் சொல்லாமல் பேசினார் ஜெ.அன்பழகன். திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம். நமக்கு எதிராக செயல்படும் அந்த “உறவை” நேரடியாக துண்டித்து, செயல் தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். ஆலமரத்தில் இருந்து சில இலைகள் உதிரலாம், ஆனால் வேர் வலிமையாக உள்ளது. ஸ்டாலின் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வார். ஒட்டு மொத்த கட்சியும் ஸ்டாலின் பின் உள்ளது என்றார் ஜெ.அன்பழகன்.