தங்களை அழைத்துப் பேச அரசு மறுத்துவிட்டதால் போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு ஆசிரியர்கள் செல்லாததால் மாணவர்கள் வீட்டிற்கு திரும்பி வருகின்றனர். அரசு அலுவலங்களில் பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். 450க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியிலும் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.

ஆனால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை. அரசு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 90 சதவீத ஊழியர்கள் பணிக்கு திரும்பி விட்டதாக அரசு கூறியது. அதேபோல், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் ஒருங்கிணைப்பாளர்களை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அது முடியாது என அரசு வழக்கறிஞர் கூறிவிட்டார்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் “90 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிவிட்டதாக கூறுவது பொய்யான தகவல். இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. முதல்வர் பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். பேச்சுவார்த்தை அழைக்கும் வகையில் தங்கள் போராட்டம் தீவிரமடையும் என தெரிவித்தார். அதேபோல், முதல்வரை சந்திக்க முடியாது என அரசு வழக்கறிஞர் பிடித்தவாதமாக தெரிவித்துள்ளார். நீதிமன்றம் சுலபமாக பிரச்சினை தீர்வு காண வலியுறுத்தி வருகிறது. ஆனால் அரசு ஏற்க மறுக்கிறது என ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்த போரட்டத்தால் மாணவர்களும், பொதுமக்களுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அரசு அழைத்து பேச வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.