உங்களுக்கு ஒரு தமிழன் கிடைக்கவில்லையா? எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு ஜேம்ஸ்வசந்தன் கேள்வி

கடந்த வாரம் வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் உலக அளவில் பரபரப்புடன் பேசப்பட்டது,. தென்னிந்தியாவில் இருந்து ஒரு படம் உலக அளவில் பேசப்படுவதால் பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்தில் இருந்த ஒருசில குறைகளை சுட்டிக்காட்டாமல் புகழ்ந்து விமர்சனம் செய்தன. இருந்தாலும் எல்லாவற்றிலும் உள்ள விதிவிலக்கு ‘பாகுபலி’க்கும் உண்டு. வட இந்திய பிரபலம் கமால் ஆர்.கான், தமிழ் இயக்குனர் தங்கர்பச்சான் போன்றோர் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாகுபலி 2’ படத்தை புகழ்ந்த போதிலும் அதில் உள்ள தமிழ் உச்சரிப்பு குறையை சுட்டிக்காட்டி, இந்த படம் தமிழினத்திற்கு விரோதி என்று கூறியுள்ளார். அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:

பாகுபலி அற்புதமான முயற்சி. அந்தக் கடுமையான உழைப்பையும், மெனக்கெடலையும் மனதார பாரட்டுகிறோம். சாதனைகளை முறியடிக்கிற வசூல் உங்கள் தரிசனத்துக்கு கிடைத்த வெகுமதி. உங்கள் வெற்றியில் நாங்களும் மகிழ்கிறோம்.

தமிழனாய் ஒரு சின்ன நெருடல். தமிழ் உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பிழையான சில இடங்களில் மனது நொந்தது. உங்கள் மேல் தவறில்லை. ஏனெனில், இது உங்கள் மொழியில்லை. தமிழுக்குப் பொறுப்பேற்றவர்கள் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். கதாபாத்திரங்களைப் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. சிலர் மனம் நோகும்.

ஹிந்தியிலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ இப்படித் தவறுகள் நிகழுமா? அதைப் பொறுத்துக் கொள்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்களோ இல்லையோ, நான் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? தவறான உச்சரிப்புகளை அடையாளம் காண இந்தத் தமிழ்நாட்டில் உங்களுக்கு ஒரு தமிழன் கிடைக்கவில்லையா? அல்லது, இங்கு இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களா? தமிழனுக்கு தமிழன்தான் விரோதி என்று சொல்வார்கள்; இப்பொழுது தமிழுக்கும் தமிழன்தான் விரோதி போலும்!

இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.