நடிகர் மன்சூர் அலிகானை நேற்று தமிழக காவல்துறை கைது செய்தது. அவர் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் விதமாக யார் பேசினாலும் அவர்கள் இருக்க வேண்டிய இடம் ஜெயில்தான் என அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசியபோது, பசுமைச் சாலைக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றால் அதில் கட்டாயமாக கலந்துகொள்வேன். எட்டு வழிச் சாலை அமைத்தால் எட்டு பேரைக் கொன்றுவிட்டுச் சிறைக்குச் செல்வேன் என ஆவேசமாக தெரிவித்தார்.

இதனையடுத்து மன்சூர் அலிகான் வன்முறையை தூண்டும் விதமாக பேசினார் என சேலம் தீவட்டிபட்டி காவல்துறையினர் நேற்று அவரை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் கைது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மன்சூர் அலிகான் வன்முறையைத் தூண்டும் வகையில் கையை வெட்டிவிடுவேன், காலை வெட்டிவிடுவேன் என்று பேசியுள்ளார். இதெல்லாம் பேச்சா? யாராக இருந்தாலும் ஜனநாயகத்தில் வன்முறையைத் தூண்டும் விதமான பேச்சுகளை அனுமதிக்க முடியாது.

மன்சூர் அலிகான் என்ன சந்திரனிலிருந்து குதித்து வந்தவரா இல்லை சூரியனில் இருந்து குதித்தவரா? அவரும் சராசரி மனிதன்தான். சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் அது தவறுதான். இப்படிப் பேசுபவர்கள் இருக்க வேண்டிய இடம் ஜெயில்தான் என்றார்.