மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க மும்பையை சேர்ந்த விபிரி மீடியா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

ஜெயலலிதா தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலில் தனக்கென தனி இடம் பதித்தவர். இந்திய அரசியலில் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். 6 முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் திரைப்பயணமும் மிகப்பெரியது. இந்நிலையில் அவரது சினிமா மற்றும் அரசியல் பயணம் குறித்த படம் ஒன்றை எடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஏற்கனவே பல பிரபலங்களுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்த மும்பையை சேர்ந்த விபிரி மீடியா (VIBRI MEDIA) என்ற நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை இயக்க பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி இந்த படத்தை துவங்க உள்ளதாகவும், அன்றைய தினமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளோம் என விபிரி மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தா பிரசாத் கூறியுள்ளார்.