சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பாஜக தலைவர்களிடம் தங்களை தற்காத்து கொள்வதற்காக செய்தியாளர்கள் ஹெல்மெட் அணிந்து பேட்டி எடுத்து நூதன போராட்டம் நடத்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தீஷ்கர் மாநிலம் ராய்பூரில் சுமண் பாண்டே என்ற செய்தியாளர், பாஜக மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த நான்கு பாஜக பிரமுகர்கள் சுமண் பாண்டேவை சரமாரியாக தாக்கிவிட்டனர். இந்த விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் ராஜீவ் அகர்வால் மற்றும் 3 பாஜக பிரமுகர்களை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை அன்று செய்தியாளர்கள் ஹெல்மட் அணிந்து கொண்டு பாஜக தலைவர்களிடம் பேட்டி எடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்.

பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து 600க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனத்திதில் ராய்பூரில் பேரணி நடத்தினார்கள். தொடர்ந்து பாஜக அலுவலகம் முன்பு குவிந்த பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக ராய்பூர் பிரஸ் கிளப் தலைவர் டாமு அமேதரே கூறுகையில், ஹெல்மெட்டை கழற்ற வேண்டும் என்றால், தாக்குதல் நடத்திய மாவட்ட பாஜக தலைவர் அகர்வாலை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இரண்டாவதாக பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.