நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை எனவும், விசாரணைக்கு பலமுறை அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகவில்லை.

இதனால், விஷாலுக்கு எதிராக சேவை வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நடிகர் விஷால் நேற்று மீண்டும் நீதிபதி முன்பு ஆஜரானார். அப்போது விஷாலிடம் நீதிபதி மலர்மதி, இதுதொடர்பாக சேவை வரித்துறையினர் 10 முறை சம்மன் அனுப்பியும் ஏன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் ‘‘பொதுவாக ஆசைப்படலாம். அதில் தவறு இல்லை. ஆனால் உரிய வரியை செலுத்தாமல் பேராசைப்படக்கூடாது’’ என கருத்து தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், ‘‘இது பொய் குற்றச்சாட்டு. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆஜராகக்கூடாது என நினைக்க வில்லை. சந்தர்ப்ப சூழல் காரணமாக ஆஜராக முடியவில்லை’’ என்றார்.

அதனையடுத்து, நீதிபதி, விஷால் மீதான குற்றச்சாட்டை முழுமையாக படித்துக் காண்பித்து, இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

இந்த குற்றச்சாட்டை எதிர்த்து வழக்கை எதிர்கொள்ள தயார் என விஷால் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி வரும் நவம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.