சினிமாவில் நடிக்க ஜூலிக்கு பெற்றோர் தடை

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜூலி வெளியே தலை காட்ட முடியாத நிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில், தொடக்கம் முதலே ஜூலி நடந்து கொண்ட விதம் யாருக்கும் பிடிக்கவில்லை. காயத்ரியின் கோபத்தை சம்பாதித்த ஜூலி, அவரிடம் ஓட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஓவியாவை பற்றி பொய்யான தகவல்களை கூறி வசமாக சிக்கினார். அதன்பின் காயத்ரியின் உதவியாளர் ரேஞ்சுக்கு அவருக்கு எல்லா வேலையும் செய்தார். இது அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களின் முகத்தை சுழிக்க வைத்தது.

எனவே, அவருக்கு வாக்களிக்காமல் ரசிகர்களும் கைவிட்டதால், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறினார். அதே நேரம், தன்னை சகோதரியாக நினைத்த பரணி சுவரை ஏறி குதித்த போது கூட கண்டுகொள்ளாமல் இருந்தது அவருக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததால், சேப்பாக் மைதானத்தில் இருந்த அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டார். இது பற்றி எதுவும் பேசவிரும்பவில்லை என ஊடகங்களுக்கு பரணி கூறிவிட்டார்.

இந்நிலையில், வீட்டிலிருக்கும் அவரின் மனநிலை பற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த அவரின் சகோதரர் ஜோஷ்வா “ பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்தையும் அவர் ஹாட் ஸ்டாரில் பார்த்தார். அதன் பின் அவர் மிகுந்த மன வேதனை அடைந்தார். அப்பா, அம்மாவிற்கும் அவர் மீது கோபம் இருந்தது. இருந்தாலும் நான் அவர்களை சமாதானம் செய்தேன். இரண்டு மாதம் ஓய்வெடுத்துவிட்டு அவரின் வேலையை அவர் தொடர்வார். ஆனால், சினிமாவிலெல்லாம் அவர் நடிக்க மாட்டார். ஏனெனில் வீட்டில் ரொம்ப ஸ்டிரிக்ட்” என பதிலளித்துள்ளார்.