சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ரஞ்சித் இயக்கிய இந்த படம் இந்தியா முழுவதும் இரண்டாயிரம் தியேட்டர்களில் வெளியானது.

படம் ரிலீசுக்கு முன்னரே 200 கோடி ரூபாய் வியாபாரம் செய்யப்பட்ட காலாவுக்கு முதல் நாள் வசூல் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. முதல் நாளான நேற்று பெரும்பாலான தியேட்டர்களில் கூட்டமே இல்லை. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டர்களில் முன்பதிவு டிக்கெட் காலியாகவே இல்லை. அந்த அளவுக்கு சுலபமாக கிடைக்கிறது காலா டிக்கெட்.

இந்நிலையில் காலா படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் காலா வெறும் 14.50 கோடி தான் வசூலாகி உள்ளது. ஆனால் இதற்கு முன்னர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் 21.50 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. பிற மாநிலங்களில் காலா 16 கோடி வசூலித்து நேற்றைய தினம் மொத்தமாக 30.50 கோடி வசூலித்ததாக தெரிகிறது.

எந்த தியேட்டரும் ஹவுஸ் புல்லானதாக தகவல் இல்லை. பொதுவாக ரஜினி படங்கள் என்றால் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம், அதுவும் அதிக விலைக்கு விற்கப்படும். ஆனால் இந்தமுறை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ரஜினி தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்தார்கள் என கூறிய கருத்துதான் இத்தனை எதிர்ப்புக்கு காரணம். அது படத்தின் வசூலை வெகுவாக பாதித்துவிட்டது.