சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் நடித்த இரண்டாவது திரைப்படம் காலா. இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்ப்புகள் மத்தியில் இன்று வெளியானது. இந்த படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் காலா படத்தை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி கூறிய கருத்து தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் காலா திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை மந்தமாகவே இருந்தது. மேலும் காவிரி விவகாரம் குறித்து ரஜினி கூறிய கருத்து கர்நாடகத்தில் அதிருப்தி ஏற்படுத்த அவர்களும் காலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இப்படி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் காலா இன்று வெளியானது. இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த காலா திரைப்படம் அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் சிலவற்றில் முன்னதாக நேற்றே வெளியானது.

இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஒரு ரசிகர் காலா திரைப்படத்தை தியேட்டரில் இருந்து 45 நிமிடங்கள் ஃபேஸ்புக் நேரலை செய்தார். இந்தியாவில் படம் வெளியாகும் முன்னரே ஃபேஸ்புக்கில் 45 நிமிட படம் வெளியானது படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனையடுத்து அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

ஆனால் இன்றைய தினம் வெளியான காலா திரைப்படத்தின் முதல் ஷோ முடிவதற்குள்ளாகவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் காலாவை வெளியிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.