சூப்பர ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் உள்ளிட்ட ஒருசில படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். புதிய படங்கள் ரிலீஸ் எப்போது முதல் தொடங்கும் என்பது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறிய விஷால் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும். இனி முழு வெளிப்படைத் தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது .

தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு குழு அமைத்து, அதன்மூலம் பட்டியலிட இருக்கிறோம். கடந்த 16 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும். சம்பளம் தொடர்பாக நடிகர்களுடன் பேச வருகிற சனிக்கிழமை எல்லா நடிகர்களையும் சந்திக்கிறோம். சம்பள விவகாரம் குறித்து அதற்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

காலா படம் வெளியீடு தள்ளிப்போகிறது. தனுஷ் மற்றும் வுண்டர்பார் நிறுவனத்திருக்கு நன்றி. அவர்களின் ஒத்துழைப்பு மிகப்பெரியது. காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வேறு ரிலீஸ் தேதியை காலா படக்குழுவினர் பின்னர் அறிவிப்பார்கள்.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.