ஹீரோ அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மிகப்பெரிய மருத்துவர். ஹீரோ விஜய் ஆண்டனி தன்னுடைய உண்மையான பெற்றோரைத் தேடி இந்தியா வருகிறார். அப்படி பெற்றோரை தேடி இந்தியாவிற்கு வரும் போது என்னஎன்ன நிகழகிறது என்பது தான் காளி படத்தின் கதை.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி வழங்க கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பு தான் காளி. இதில் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு நாயகிகள். அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா உள்ளிட்ட நான்கு ஹீரோயின்கள். கிருத்திகா உதயநிதி முதலில் இயக்கிய படம் வணக்கம் சென்னை. காளி படமானது இரு மொழிகளில் உருவாகியுள்ளது தமிழில் காளி என்ற பெயரிலும், தெலுங்கில் காசி என்ற பெயரிலும் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் மிகப்பெரிய மல்டி ஸ்பொஷாலட்டி ஆஸ்பத்திரியில் மிகச்சிறந்த டாக்டராக இருக்கும் விஜய் ஆண்டனி. அவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது. அந்த கனவில் குழந்தையை மாடு ஒன்று முட்ட வருகிறது. அப்படி முட்ட வரும்போது ஒரு பெண் நடுவில் வந்து காப்பாற்றுவது போல அந்த கனவில் இருக்கிறது. இந்நிலையில் லண்டன் மருத்துவப் பல்கலைகழகத்தில் இதயநோய் மருத்துவத்தில் நிபுணராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் அவரது மருத்துவமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்படுகிறார்.

அவருடைய அம்மாவுக்கு கிட்னி செயலிழந்த காரணத்தால் அவரே தன்னுடைய கிட்னியை தர முன்வருகிறார். விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்று அவருடைய அப்பா சொல்கிறார். அதற்கான காரணம் என்னவென்றால் நீ எங்களின் வளா்ப்பு மகன் அதனால் தான் உன் சிறுநீரகம் சேராது என்று உண்மையை சொல்லி விடுகிறார். அதன்பின் மாற்று சீரகம் ஏற்பாடு செய்து தன் அம்மாவை காப்பாற்றி விடுகிறார். எனவே தன் பெற்றோரைத் தேடி இந்தியாவுக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. அப்படி இந்தியா வரும் அவர் கனவுக்கரை என்ற கிராமம் தன் சொந்த கிராமம் என்பதை தெரிய வர, அங்கயே காளி பெயரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அப்படியே தனது நிஜ பெற்றோரை தேடி கண்பிடிக்கிற ஆரம்பிக்கிறார். அதன் பின் தான் கிளைமேக்ஸ் காட்சி. அப்பா அம்மாவை கண்டுபிடித்தாரா? அப்போது அவருக்கு யார் யார் உதவி செய்கிறார்கள், என்பதை விறுவிறுப்பாகவும், வித்தியாசமான களத்தில் காட்டுகிறது காளி.

விஜய் ஆண்டனி மருத்துவர், கல்லூரி மாணவர், காட்டு பையன் காளியாக, நாசரின் இளவயது திருடன் மாரியாக , இளம் வயது பாதர் அருட்தந்தை ஜான் என வழக்கம் போல அசத்தியிருக்கிறார். பந்தாவாக அமெரிக்க டாக்டராக வரும் விஜய் ஆண்டனி ஒவ்வொரு கெட்அப்பிலும் களம் காட்டியுள்ளார்.

இந்த நான்கு பாத்திரங்களுக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஐயர் என நான்கு கதாநாயகிகள். இதில் மனதில் நிற்பது, வயதான மனிதரைத் திருமணம் செய்துகொண்டு, திருடனைக் காதலிக்கும் ஷில்பா மஞ்சுநாத்தின் பாத்திரம். இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர், சித்த மருத்துவராக வரும் அஞ்சலி. மனசு காயப்பட்டிருக்கும் மருந்து போடணும் தூக்கம் கூட வரலை என்று நாட்டு வைத்தியம் பார்க்கும் அஞ்சலி தான் படத்திற்கு கூடுதல் பலம். கல்லூரி நாயகியாக வந்து அம்ரிதா பன்ச் டயலாக் பேசுவது அருமை. சுனைனா படத்தின் ஜீவனுள்ள கதாபத்திரம். அதை புரிந்து கொண்டு சரியாக செய்திருக்கிறார்.

சென்டிமெண்டாக செல்லும் கதையில் நம்மை காமெடியில் சிரிக்க வைத்திருப்பவர் யோகி பாபு. நான் என்ன அப்பாவைக் கண்டுபிடிப்பது எப்படினு படிச்சிட்டா வந்திருக்கேன் என்ற உடன் திரையரங்கமே அதிருகிறது. அதுபோல வாப்பா டாக்டரு அடிக்க ஆளு இல்லன்னா அவனையே அடிச்சு ப்பான் போல என்று கலக்கல் காமெடி.

நாயகன் தன் பெற்றோரைத் தேடும் போது வரும் கதாபாத்திரங்களான மதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் என அவர்களுடைய ஃப்ளாஷ்பேக்கை சொல்லும்போது சிறுவயது கேரக்டர் அனைத்திலும் விஜய் ஆண்டனியே வருவது கொஞ்சம் உறுத்தல் தான்.

படத்திற்கு இசை விஜய் ஆண்டனி அமைத்திருக்கிறார். அரும்பே அரும்பே பாடல் மிகவும் அருமையாக உள்ளது. மற்ற பாடல்களான நூறாய் யுகம் நூறாய்.., மனுஷா மனுஷதா.., அடி வயிற்றில் இடம் கொடுத்து எல்லாம் கொஞ்சம் சுமார் தான்.

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இந்த படத்தில் தன்னுடைய திறமையை கொஞ்சம் அதிகபடுத்தியிருக்கிறார். சாதிப் பிரிவினையின் அச்சத்தையும், மத்திய அரசின் பண மதிப்பிடிப்பு நடவடிக்கையும் அழகாக காட்டியிருக்கிறார். முதல் படத்தை காட்டிலும் அதிக உழைப்பை கொட்டியிருக்கிறார் இயக்குநர்.