ஜீ5 இணையதளத்தில் வெளியாகியுள்ள களவு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு காண்போம்..

நம் வாழ்வில் அனைவரும் சில சூழ்நிலைகளில் சிறிய தவறுகளை செய்யப்போய் சிக்கலில் சிக்கியிருப்போம். அப்படி மூன்று இளைஞர்கள் தாங்கள் செய்யாத குற்றத்தில் சிக்கி அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே களவு படத்தின் ஒரு வரிக்கதை.

ஒரு குற்றம் நிகழ்த்தப்பட்டு, பல கோணங்களில் கதை நகர்ந்து இறுதியில் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் க்ரைம் திரில்லராக களவு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மது அருந்தி விட்டு இரவில் வெளியே சுற்றும் வாலிபர்கள், செயின் பறிப்பு சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகள், போலீசாரின் அணுகுமுறைகள் மற்றும் விசாரணைகள், பெற்றோர்களின் பரிதவிப்பு, கள்ளக்காதல், கொலை செய்யக்கூட தூண்டும் வறுமை நிலை, பழி வாங்கும் உணர்ச்சி, நிரபராதிகள் கூட கொலைப்பழியில் எப்படி சிக்க வைக்கப்படுவார்கள், காவல்துறையினரின் பாகுபாடுகள், நாம் அன்றாடம் செய்திதாள்களில் கடக்கும் கொலைகளின் உண்மையான, அதிர்ச்சிகரமான பின்னணிகள் என அனைத்தும் ‘களவு’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

‘பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடி தான் மண்ணுக்கு போகிற உலகத்துல’ என இளையராஜா பாடிய பாடல் வரிகளை படம் தொடங்கும் முன்பே போடுகிறார்கள். மேலும், இது ஒரு உண்மைக் கதை என படத்தின் டைட்டிலேயே கூறப்பட்டுள்ளது.

சென்னை அனகாபுரத்தில் ஒரு மார்கழி இரவில் படம் தொடங்குகிறது. திருமணமான ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் காரில் சல்லாபத்தில் ஈடுபட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, மூன்று வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை பறிக்க முயல, கீழே விழுந்து அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

ஒரு பக்கம், மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பும் மூன்று நண்பர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக, வாகன சோதனையில் நிற்காமல் செல்ல, அப்பெண்ணின் தங்க சங்கிலியை பறித்தது அவர்கள்தான் என போலீசார் கருதுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் எவ்வாறு தப்பினார்கள் என்பதை ‘களவு’ படம் விவரிக்கிறது.

நடிகர்கள் கலையரசன், கருணாகரன், அபிராமி ஐயர், இயக்குனர் வெங்கட்பிரபு, சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். மெட்ராஸ் படத்தில் கார்த்தியின் நண்பன் அன்புவாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் கலையரசனுக்கு அதன்பின் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.   ‘களவு’ படத்தில் அவருக்கு முக்கிய வேடம். எனவே, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

போலீசாரை பார்த்து மிரள்வது, அவர்களிடமிருந்து அசால்ட்டாக தப்பி செல்வது, காவல் நிலையத்தில் தந்தை அவமானப்படுவதை பொறுக்க முடியாமல் குற்றத்தை ஒப்புக்கொள்வது, உண்மையான கொலையாளியை தேடி அலைவது என அவரின் நடிப்பு அபாரம். ஒரு சென்னை வாலிபரை அப்படியே கண்முண் கொண்டு வந்து நிறுத்துகிறார். சிறு சிறு முகபாவணைகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். அவரது கண்களே எல்லாவற்றையும் உணர்த்தி விடுகிறது.

சில நிமிடமே வந்தாலும், கணவனை பிடிக்காமல், வேறு ஒருவருடன் கள்ளக்காதல் கொள்ளும் மாடர்ன் பெண் வேடத்தில் நடித்துள்ள அபிராமி ஐயரின் நடிப்பும் சிறப்பு.  அதேபோல், கலையரசனின் நண்பராக நடித்துள்ள வாட்சன் சக்ரவர்த்தியும் கவனம் ஈர்க்கிறார். தன் மகன் நல்லவன் என நம்பும் சராசரி தந்தை வேடத்தில் நடிகர் சேத்தன். தன் மகனை பற்றி போலீசார் விசாரிக்கும் போது பதறுவதும், காவல் நிலையத்தில் கூனி குருகுவதும் ஒரு உண்மையான தந்தையாகவே மாறியுள்ளார்.

அபிராமி ஐயரின் கணவராக நடித்துள்ள கருணாகரன் நடிப்பு மிகச்சிறப்பு. ஆசை மனைவி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடுகையில் பதட்டத்துடன் ஓடி வருவதும், அவர் மற்றொருவருடன் தொடர்பில் இருக்கிறார் எனத் தெரிந்து அதிர்ச்சி அடைவதும், மனைவியின் கள்ளக்காதலன் தன்னிடமே வந்து மனைவியை பற்றி விசாரிக்கும் போது கோபத்தை அடக்கிக் கொண்டு அவரிடம் பேசுவது என அவரின் நடிப்பு செம.

அதேபோல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு. இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்ததில்லை. மனுஷன் வெளுத்து வாங்கியிருக்கிறார். குற்றவாளிகளை அசால்டாக டீல் செய்வதும், கோபத்தில் கத்துவதும் என போலீஸ் அதிகாரியாகவே வாழ்ந்திருக்கிறார். தியேட்டர் காவலாளியாக சின்னி ஜெயந்த். மகள் திருமணத்துக்காக கடன் வாங்கி கட்ட முடியாமல் தவிக்கும் தந்தையாகவும், பணத்துக்காக கொலை செய்யக்கூட துணியும் அவரின் நடிப்பும் பிரமாதம்.

முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் முரளி கார்த்திக். ஒரு க்ரைம் திரில்லர் கதைக்கு தேவையான காட்சிகளை மாலை போல் அழகாக கோர்த்து ‘களம்’ படத்தை இயக்கியுள்ளார். எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் படத்தை இயக்கியுள்ளார். ‘நல்லவனா இருந்தா நல்லவன்கிற பேர் மட்டும்தான் கிடைக்கும். கெட்டவனா இருந்தா நல்லவன்கிற பேர தவிர எல்லாம் கிடைக்கும்’. ‘இங்க இருக்குறது ரெண்டே பேருதான். பணத்தை வச்சுகிட்டு எல்லாம் பண்றவன். பணத்துக்காக எதுவும் பண்றவன்’ போன்ற வசனங்கள் செம சார்ப்.. ஒரு குற்றம்.. பல கோணங்கள்..  மூன்று பேர் கைது.. முடிவு என முடிச்சுகளை அழகாக அவிழ்த்து களம் திரைப்படதை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார்.

களம் படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ராஜகோபாலன். பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் ஒளிப்பதிவாளரின் பங்கை புரிந்து  வேலை செய்துள்ளார். காட்சிகளின் சூழ்நிலை, கதாபாத்திரங்களின் தன்மைகளை புரிந்து அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்திற்கு பெரிய பலம் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி. அவரது பின்னணி இசையில் ஒவ்வொரு காட்சியும் நம் மனதில் அப்படியே பதிகிறது.  அதேபோல், படத்தின் கதை ஓட்டத்தை புரிந்து கன கச்சிதமாக எடிட்டிங் செய்துள்ளார் கிருபாகரன் புருஷோத்தமன். அவரின் எடிட்டிங்கில் படம் விறுவிறுவென செல்கிறது. காவல் நிலையம் மற்றும் மருத்துவமனையை அப்படியே கண்முன் நிறுத்துகிறார் கலை இயக்குனர் சீனு ராவ். தளபதி தினேஷ் சண்டைக்காட்சி அமைத்ததோடு ஒரு கட்சியிலும் நடித்துள்ளார்.

க்ரைம் திரில்லர் ரசிகர்களுக்கு ‘களவு’ திரைப்படம் ஒரு தரமான விருந்து…..

ஐ.பி.கார்த்திகேன், திலீபன் எம்.செங்கோட்டையன், கிருஷ்ணகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘களவு’ திரைப்படத்தை ஜீ5 இணையத்தில் கண்டுகளியுங்கள்.

ரூ.49 மட்டுமே செலுத்தி ஒரு மாதம் முழுவதும் பல தமிழ் இணைய தொடர்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்!