தூத்துகுடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வந்த நிலையில் இன்று அந்த ஆலையை மூடுவதற்காக அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துகுடி மாவட்ட கலெக்டர் சீல் வைத்தார். இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது:

‘போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் இரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்’

இந்த ஆலை மூடப்பட்டது குறித்து கமல் கூறியதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் முடிவு, மக்கள் வலிமையின் இன்னுமோர் பேருதாரணம். அனைத்து அரசியல் கட்சிகளும் சிரம் தாழ்த்தி ஏற்க வேண்டிய பாடம். களத்தில் பலியான தியாகிகளை போற்றுவதோடு இல்லாமல் பாடமும் கற்கவேண்டும்.

தமிழக அரசியலின் புதிய பொழிப்புரையை தூத்துக்குடி எழுதிவிட்டது. தமிழகமே அதைப்பின்பற்றி இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வேண்டும். அரசியல்வாதிகளின் தேவைக்கான காரணத்தை, புதிய பாடமாக கற்றுத் தந்துள்ளது இப்போராட்டம். இக்கல்வி கற்று, மக்கள் நீதி மய்யம் பள்ளியாய் மாறி வீதிதோறும் இச்செய்தியை பரப்பும்

தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். வெறும் சாட்சிகளாக , திணிக்கப்பட்ட செய்திகளின் கைதிகளாக இனி தமிழர் இயங்கமாட்டார்கள். நாம் விரும்பும் மாற்றமாக மாறத் துவங்கி விட்டோம்

சரியான நேரத்தில் மக்களின் போராட்டத்தைப் புரிந்து கொண்டு அரசு செயல்பட்டிருந்தால் தேவையற்ற உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம். ஸ்டெர்லைட் தரப்பில் முன்வைக்கப்படும் சட்டரீதியான எதிர்ப்புக்களை அரசு எதிர்கொண்டு இந்த ஆணையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Loading...