அரசியலில் வெல்ல என்ன செய்யவேண்டுமென்று கமலுக்கு தெரியும்: அமைச்சர்கள் முன்னால் தைரியமாக பேசிய ரஜினி

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார். விழாவில், அமைச்சர் பெருமக்களும், திரையுலகை சேர்ந்த எண்ணற்ற திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். அனைவரும் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி பேசும்போதும், சிவாஜி மணிமண்டபத்தை திறந்துவைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலி. அவர் இந்த மணிமண்டபத்தை திறந்து வைத்ததன் மூலம் அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சிவாஜி என்ற கலைஞன் சுதந்திர போராட்ட வீரர்களை நம் கண்முன் நிறுத்தியவர். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருக்கும்போது அதிகமான ஆன்மீக படங்களில் நடித்தவர் சிவாஜி. ஆனால், சிவாஜி தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்தது அந்த மக்களுக்கு நேர்ந்த அவமானம்.

அரசியலில் வெல்ல பெயர், புகழ் மட்டும் போதாது அதற்கு மேல் என்ன வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியும். 2 மாதங்களுக்கு முன் கேட்டிருந்தால் அரசியலில் வெற்றி பெற என்னவேண்டும் என்ற ரகசியத்தை சொல்லியிருப்பார். அரசியலில் வெற்றிபெற என்ன தகுதி வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லி பேச்சை முடித்தார். பின்னர், அமைச்சர்களும், துணை முதல்வரும் சிறப்புரையாற்ற விழா இனிதே முடிவடைந்தது.