சிவாஜிகணேசனை எந்த அரசாக இருந்தாலும் மதித்தே ஆகவேண்டும், கெஞ்ச வேண்டியதில்லை: கமல் ஆவேசம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறில் ஆந்திரா மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளது. இந்த மணிமண்டபத்தை சிவாஜிகணேசனின் பிறந்தநாளான (அக்.1) இன்று தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி, கமல், நாசர், விஷால், கார்த்தி, விஜயகுமார், சரத்குமார், சூர்யா, சத்யராஜ், நடிகை ராதிகா, மற்றும் சிவாஜி குடும்பத்தை சேர்ந்த பிரபு, ராஜ்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். மேலும், பெருந்திரளான ரசிகர் பெருமக்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் கமல் பேசும்போது, சிவாஜிகணேசன் மாநில, தேசிய, ஆசிய எல்லைகள் கடந்து புகழ் பெற்றவர். யாரையும் மிரட்டியோ, கெஞ்சியோ சிவாஜியை மதிக்கவேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை. எத்தனை அரசுகள் வந்தாலும் சிவாஜி என்ற கலைஞனுக்கு மரியாதை செய்தே ஆகவேண்டும். என்னை யார் தடுத்திருந்தாலும் இந்த மணிமண்டப திறப்பு விழாவுக்கு வந்திருப்பேன். நடிகராக இல்லாவிட்டால் ஒரு ரசிகனாக இந்த விழாவிற்கு வந்திருப்பேன். விழாவுக்கு என்னை அழைத்த கலையுலகிற்கும் அரசுக்கும், அரசியலுக்கும் நன்றி என்று பேசி முடித்தார்.