கமல்-ஷங்கர் கூட்டணியில் 21 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தையும் ஷங்கர் இயக்க கமல் நடிக்கவுள்ளார். கமல் அரசியலில் நுழைய காத்திருக்கும் வேளையில், அரசு இலாகாக்களில் நடக்கும் ஊழல்களை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்த ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் அவருக்கு அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தித்தான் கதையை நகர்த்தவிருக்கிறார்களாம். முந்தைய பாகத்தில் நடித்ததுபோல் இப்படத்திலும் இரண்டு வேடத்தில் கமல் நடிப்பாரா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் உருவானாலும் மற்ற இந்திய மொழிகளிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதாவது மலையாளம், இந்தி, ஆங்கில மொழிகளிலும் இப்படத்தில் டப் செய்து வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தை ‘இந்தியன்’ படத்தைவிட மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.