இந்து தீவிரவாதம் குறித்து நான் பேசியது வரலாற்று உண்மை எனக் கமல் விளக்கம் அளித்துள்ளார்.

அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த முஸ்லிம் மக்கள் அதிகம் உள்ள பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று கூறினார்.

கமலின் இந்த பேச்சுதான் கடந்த இரண்டு நாட்களாக இந்திய அரசியல் களத்தின் விவாதப் பொருளாக உள்ளது. வார்டு கவுன்சிலர் முதல் பிரதமர் வரை அனைவரும் இதற்குக் கண்டனமோ விளக்கமோ அளித்து விட்டனர். இதையடுத்து இன்று திருப்பரங்குன்றத்தில் கமல் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அங்கு பேசியக் கமல் ‘யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை ; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. தேர்தல் அரசியலில் சேர்ந்த பின், ஒரு இனம் மட்டும் போதுமா ? மக்கள் அனைவருக்குமே நீதி கிடைக்க வேண்டும்’ எனப் பேசியுள்ளார்.