சென்ற வருடம் மிகவும் பரபரப்பாக நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 நேற்று தொடங்கியது. சென்ற ஆண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் இந்த ஆண்டும் தொகுத்து வழங்குகிறார்.

சென்ற ஆண்டு அரசியல் பேசிக்கொண்டிருந்த கமல் இந்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்கிவிட்டார். அதன் பின்னர் அவர் முதல் முதலாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். எனவே இந்தமுறை கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் நெடி கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்றமுறை பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுப்பதாக செய்திகள் வெளியானதையொட்டி அதனை கிண்டல் செய்யும் விதமாக கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது வெளியில் ஃபைவ் ஸ்டார் சிறையெல்லாம் இருக்கு என கூறினார்.

அதே போல இந்த முறை பிக் பாஸ் வீட்டில் என்னென்ன மாற்றங்கள் உள்ளது என பார்வையிட சென்ற கமல், பிக் பாஸ் வீட்டில் விதிகளை மீறுபவர்களுக்கு, தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக சிறை வடிவமைக்கப்பட்டுள்ளதை பார்த்தார். அந்த சிறையின் உள்ளே சென்று பார்த்த கமல், என்ன ஃபேன் கூட இல்லையே, அப்ப ஒரிஜினல் சிறை இல்லையா எனக் மீண்டும் அதே சம்பவத்தை கிண்டல் செய்துள்ளார்.